Bloggroll



//** UPDATED NEWS **தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியும் தமிழ் அநிதம் (அமெரிக்கா)-உம் இணைந்து “தமிழ் மொழியும் கணினித் தொழில் நுட்பமும் ” என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கம் 23-04-2022 அன்று நடைபெறுகிறது// **** APDATED NEWS ** ***








22 November 2018

இந்திய மொழிக்குடும்பங்கள்

இந்திய மொழிக்குடும்பங்கள்

உலக மொழிகள்: இனவகை மொழிகள் – அமைப்புவகை மொழிகள் – வட்டார மொழிகள்; இந்திய மொழிகளின் கள ஆய்வுத்திட்டம் – இந்திய மொழிகளின் வரலாறு - இந்திய மொழிக் குடும்பங்கள்: திராவிட மொழிக்குடும்பம் – இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம் – சீன திபத்திய மொழிக்குடும்பம் – முண்டா அல்லது ஆஸ்ட்ரோ ஆசிய மொழிக்குடும்பம்; கால்டுவெல் - திராவிடம் என்ற சொல் – திராவிட மொழிகளின் சிறப்பியல்கள் - திராவிட மொழிக்குடும்பம்: தென்திராவிட மொழிகள் – தென் நடுத்திராவிட மொழிகள் - நடுத் திராவிட மொழிகள் – வட திராவிட மொழிகள்; தமிழின் சிறப்பியல்புகள் –
உலக மொழிகள்
2011-இல் எடுக்கப்பட்ட உலக மொழிகள் கணக்கெடுப்பின்படி, உலகில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் 6500 கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏறத்தாழ 2000 மொழிகள் ஆயிரத்திற்கும் குறைவான மக்களாலேயே பேசப்படுகின்றன.  உலகில் உள்ள மொழிகளை மொழியியல் அறிஞர்கள் இனவழி மொழிக்குடும்பம் என்றும் அமைப்புவழி மொழிக்குடும்பம் என்றும் இரண்டாகப் பகுப்பர்.  இனவழிமொழிக்குடும்பம் என்பது தமிழும் மலையாளமும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பிற்காலத்தில் அவை இரண்டாகப் பிரிந்ததுபோல் பலநூறு ஆண்டுகளுக்குமுன் ஒரு மொழியாக இருந்து பின்னர் அந்த மொழியிலிருந்து பல மொழிகள் உருவாக்கம் பெறுவது ஆகும். இவைதவிர, பல்வேறு மொழிகளை வட்டாரவகை மொழிகள் என்றும் சில அறிஞர்கள் பகுத்துப் பார்க்கின்றனர்.
இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்கள்
உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவில்தான் மிகுதியான மொழிகள் பேசப்படுகின்றன. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யா பிரியாமல் இருந்த காலத்தில் இந்த நாடுதான் உலகிலேயே அதிக மொழிகள் பேசும் நாடாக விளங்கியது. சோவியத் ரஷ்யா பிளவுபட்டபின், இந்திய நாடு அதிக மொழிகள் பேசும் நாடாக விளங்குகின்றது. பல்வேறு இனக்குழுக்கள் நிறைந்த நாடாகவும் அதுபோலவே பல்வேறு மொழிகளைப் பேசும் சமூகத்தைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்திய நாட்டில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றன. தொடக்க நிலையில் இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து படிப்படியாகத் தோன்றியவை என்று தவறாகக் கணிக்கப் பட்டிருந்தது. கல்கத்தாவிலுள்ள ஆசியக் கல்விச் சங்கத்தைத் (Asiatic Society) தோற்றுவித்த சர். வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தோடு தொடர்புடையது என்பதை 1786-இல் நிலைநாட்டியபோது இந்திய மொழிகள் பற்றிய பழைய கண்ணோட்டங்கள் மாற்றம் காணத் தொடங்கின.
திராவிட மொழி ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் கால்டுவெல் தென்னாட்டில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், முதலான ஒன்பது மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து மாறுபட்ட திராவிட மொழிக்குடும்பம் என்னும் தனிக்குடும்பத்தைச் சார்ந்தன என்று 1856-இல் நிறுவிய போது தென்னிந்திய மொழிகள் பற்றிய பழைய கருதுகோளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் தோன்றியது.
இவ்விரு மொழிக் குடும்பங்களைத் தவிர, திபத்தோ - சீன மொழிக்குடும்பம், ஆஸ்ட்ரிக்-ஆசிய அல்லது முண்டா மொழிக்குடும்பம் ஆகிய இரு வேறுபட்ட மொழிக் குடும்பங்களும் இந்திய மொழிக்குடும்பத்தில் இணைந்து கொண்டன. 1864 -இல் மாக்ஸ்முல்லர் முண்டாவைத் தனி மொழிக்குடும்பமாகக் கண்டறிந்தார். இந்நிலையில் இந்திய நாட்டில் வேறுபட்ட நான்கு மொழிக்குடும்பங்களைச் சார்ந்த மொழிகள் பேசப்படுவதாகக் கருதப்பட்டு வந்தது.
தற்போது அந்தமான் நிகோபார் தீவிலுள்ள மொழிகளும் ஒரு தனி மொழிக்குடும்பமாகக் கருதப்படுகின்றது. வேறு ஒரு மொழிக்குடும்பம் நெடுங்காலமாக வழக்கிலிருந்து காலப்போக்கில் அழிந்திருக்க வேண்டும் என்றும், நகலி' என்ற மொழி அதன் எச்சம் என்றும் கருதப்படுகின்றது. இந்நிலையில் வேறுபட்ட ஆறு மொழிக்குடும்பங்களைச் சார்ந்த மொழிகள் இந்நாட்டில் தற்போது வழக்கில் உள்ளன. எனினும் மொழியியலார் பலர் முற்சுட்டிய நான்கு மொழிக் குடும்பங்களையே இந்தியாவின் மொழிக்குடும்பங்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்திய மொழிகள் பற்றிய வளமான தகவல்கள் பலவகைப்பட்டனவாக அமைந்து மொழி ஆய்வாளர்களை அதிக வியப்பில் ஆழ்த்துகின்றன. இம்மொழிகளுள் நகலி, பாலி, பிராகிருதம் முதலானவை ஏட்டளவில் மட்டுமே உள்ளன. ஏட்டளவில் உள்ள சமஸ்கிருதம் சமயச் சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதோடு சிறுபான்மையினரால் பேசவும் படுகின்றது. பல்வேறு இனங்களாக பல்வேறு மொழிக்குழுவினர்களாக இருந்த பரந்துபட்ட இந்நாட்டு மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் இடையில் சில பொதுமைப் பண்புகள் அங்கும் இங்கும் இழையோடியதன் விளைவாக இந்தியப் பொதுமைப் பண்பாடு (Pan-Indian Culture) கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து ஏற்பட்ட பண்பாட்டு இனக்கலப்பால் அரும்பத் தொடங்கியது. மேற்கூறிய மொழிக்குடும்பங்கள் பலவற்றிற்கும் இடையில் சொற்கள், இலக்கணக் கூறுகள் போன்றவை  கொள்வினை கொடுப்பினை மூலம் பரந்துபட்டுக் கிடப்பதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான இந்திய மொழிகளில் இலக்கிய மரபுகளும் காலப் போக்கில்தான் அரும்பின; எழுத்துகளும் காலப் போக்கில்தான் தோன்றின.
இந்திய மொழிகளின் கள ஆய்வுத்திட்டம்
இந்திய நாட்டில் பல மொழிகள் பேசுவதால் 1866-இல் வியன்னாவில் கூடிய கீழ்த்திசை மாநாடு (Oriental Congress) இந்திய மொழிகள் பற்றிய ஆவினை இந்தியாவில் தொடங்குமாறு இந்திய அரசை வற்புறுத்தியது. இதை ஆய்வு செய்து 1881-ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் முதன்முதலாகப் பிறந்த இடம், பேசும் மொழி என்ற இரு தகவல்களையும் கூடுதலாகத் திரட்ட முடிவு செய்யப்பட்டது. அதோடு தனி நபரின் தாய்மொழி எது என்ற தகவலும் இக்கணக் கெடுப்பில் இடம் பெற்றது. இக்கணக்கெடுப்பு இந்திய மொழிகள் பற்றிய புதிய பல்வேறு தகவல்களைத் தந்தது. இந்திய மொழிகள் பற்றிய கள ஆய்வுத்திட்டம் (Linguistic Survey of India) செயல்வடிவம் பெற்றது.
இத்திட்டத்திற்கு சர். ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் (Sir, George Abraham Grierson) என்பவர் மேலாளராக 1898-இல் நியமனம் பெற்றார். 29 ஆண்டுகளில் நிறைவு பெற்ற இக்களப் பணியின் அரிய கருத்துக்கள் பற்றிய முதல் தொகுதி 1927-இல் வெளியானது. இதில் 79 மொழிகளும், 544 கிளைமொழிகளும் இந்திய நாட்டில் உள்ளதாகச் சுட்டபபட்டது. இதன் பின்னிணைப்பில் 872 மொழிகள் இந்திய நாட்டில் உளளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கூறிய திட்டத்தால் இந்திய மொழிகள் பற்றிய ஏராளமான புதுத் தகவல்கள் கிடைத்தன.
இந்திய மக்களும் மொழிக்குடும்பங்களும்
1961-ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் 1652 மொழிகள் இந்தியாவில் பேசப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 57.4 மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளாக உள்ளன. இவற்றைப் பேசியோர் இந்திய மக்கட் தொகையில் 73.30 விழுக்காட்டினர் ஆவர். மக்கட்தொகை அடிபடையில் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. திராவிடமொழிக் குடும்பத்தில் 153 மொழிகள் உள்ளன என்று இக்கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதில் பலவற்றை மொழியியலார் தனி மொழிகளாகக் கொள்ளாது வட்டார வழக்குகளாகவே கொள்கின்றனர். இந்திய மொழிக் குடும்பத்தில் பேசுவோரை வைத்து மதிப்பிடும்போது திராவிட மொழிக்குடும்பம் இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. இந்திய மக்கட் தொகையில் 24.47 விழுக்காட்டினர் இம்மொழிகளைப் பேசுகின்றனர்.
முண்டா அல்லது ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தில் 65 மொழிகள் உள்ளன. 1961ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மொழிகளைப் பேசுவோர் வெறும் 6,192,495 பேர் எனத் தெரிகின்றது. இவற்றோடு வகை பிரித்தறிய முடியாத 530 மொழிகளும் உள்ளன என்று இக்கணக்கெடுப்பு புலப்படுத்தியது. 1981-இல் மேற்கொள்ளப்பட்ட மக்கட் தொகைக் கணக்கெடுப்பு இந்திய மொழிகள் பற்றிய பல புதிய வெளிச்சங்களை மேலும் தந்தது. திபெத்தோ-சீனமொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியான திபெத்தோ-பர்மிய மொழிக்குடும்பத்தினை 0.73 விழுக்காட்டினர் பேசினர். சீனோ-திபெத்திய மொழிக்குடும்பத்தில் 226 மொழிகள் கண்டறியப்பட்டன.
இந்தி பேசுவோர் எண்ணிக்கை 1971-இல் 38 விழுக்காடாக இருந்தது. இது 1981இல் 42.88 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, திராவிட மொழிகளைப் பேசுவோரில் 17.14 விழுக்காடு மலையாள மொழி பேசுவோரும் 9.69 விழுக்காடு தமிழரும் 6.85 விழுக்காடு தெலுங்கரும் 9 விழுக்காடு கன்னடர்களும் இந்தி மொழியைக் கற்றுப் பேசும் திறமுடையோராகத் திகழ்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
1981ஆம் ஆண்டுக் கணிப்பின்படி 6106 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியைப் பேசுகின்றனர். பீகாரில் 1745 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 1166 பேரும் கர்நாடகாவில் 882 பேரும் மகாராஷ்ட்ரத்தில் 559 பேரும் இதனைப் பேசுகின்றனர். பிறர் இந்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளோடு சமஸ்கிருதத்தையும் பேசுகின்றனர். இவர்கள் இருமொழி வழக்கினர் (Binguals) ஆவர். பேசுவோரின் எண்ணிக்கையினை அடித்தளமாகக் கொண்டு இந்திய நாட்டு மொழிக்குடும்பங்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம். 
§  ஆரியன் அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம்
§  திராவிட மொழிக்குடும்பம்
§  முண்டா அல்லது கோல் அல்லது ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக்குடும்பம்
§  சீனோ-திபெத்திய மொழிக்குடும்பம்
இந்திய மொழிக்குடும்ப ஆய்வில் திராவிட மொழிகள் பற்றிக் கால்டுவெல் மேற்கொண்ட ஆய்வு மிகச்சிறப்பு வாய்ந்தது. கால்டுவெல்லைத் தொடர்ந்து ஜான்பீம்ஸ் என்பவர் இந்தியாவின் தற்கால ஆரிய மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Grammar of the Modern Aryan Languages of India) என்ற நூலின் மூன்று தொகுதிகளை முறையே 1872, 1875, 1879 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார். இது இந்திய மொழிகள் பற்றிய ஆய்வில் பல புதிய பரிமாணங்களை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற சமஸ்கிருத மொழி அறிஞரான திரு. ராமகிருட்டிண கோபால் பந்தர்கர் 1877-இல் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இந்தோ-ஆரிய மொழிகள் பற்றிய விரிவான சொற்பொழிவு ஆற்றியுள்ளார். ஆரிய மொழிகள் சமஸ்கிருதம், பிராகிருதம், பாஷா என்ற மூன்று நிலைகளில் முறையே பழைய இந்தோ-ஆரியம், இடைக்கால இந்தோ-ஆரியம், புதிய இந்தோ-ஆரியம் என்ற படிநிலைகளில் காலந்தோறும் வளர்ந்துள்ளதை இவர் தமது உரையில் விரிவாக விளக்கிக் காட்டினார். இவற்றைத் தொடர்ந்து சிந்தி, இந்துத்தானி, வங்காளமொழி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மைதிலி, காஷ்மீரி போன்ற பல்வேறு தனித்தனி மொழிகளின் வளர்ச்சி பற்றியும் அறிஞர்கள் பலர் ஆய்ந்து நல்ல பல நூல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்திய மொழிகளின் வரலாறு
நீக்ரோ இனத்தவர்கள் தொடக்க நிலையில் தமது மொழிகளை இந்திய மண்ணில் நிலைநிறுத்தியிருக்கலாம் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இந்த இனத்தவரின் கூறுகளைத் தமிழ் நாட்டிலுள்ள இருளர்கள், காடர்கள், பணியர்கள், குறும்பர்கள் ஆகியோரிடம் காண்கின்றோம். தமது மொழியை இழந்து தற்போது இவர்கள் தமிழ் மொழியிலிருந்து முகிழ்த்த பல கிளைமொழிகள் அல்லது வட்டார வழக்குகளைப் பேசுகின்றனர்.
திபெத்தோ-பர்மிய மொழிக்குடும்பம் சார்ந்த மொழிகளைப் பேசும் மங்கோலிய இனத்தைச் சார்ந்த மக்களைக் 'கிரதர்கள்' என்று வேதகால ஆரியர் அழைத்தனர். இவர்களைப் பற்றிய குறிப்பு அதர்வண. யஜூர் வேதங்களில் காணமுடிகின்றது.
ஆஸ்ட்ரிக்மொழி பேசுவோர் சீனாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. சிலர் திராவிடர்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த மத்திய தரைப்பகுதியினரே இவர்கள் என்பர். திராவிடர்கள் ஆசியா மைனர், கிழக்கு மத்தியத் தரைக்கடற்பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்திருக்க வேண்டுமென்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இதற்கு மாறுபட்ட கருத்துகளும் உள்ளன.
கிழக்கு ஈரான் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் (North-western India) வாழ்ந்த ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து இந்தியாவிலுள்ள நகர நாகரிகங்களை (City-culture) அழித்தனர். இந்தியாவில் முதலில் கிழக்கு வடக்குப் பஞ்சாப் பகுதிகளில் தங்கிய அவர்கள் பல்வேறு பகுதிகளிலும் பரந்துபட்டு வழத்தொடங்கினர். இவர்கள் இந்தோ-ஆரிய மொழிகளின் பரவுதலுக்கு அடிகோலி நின்றனர். இவ்வாறு பல்வேறு காலங்களில் வந்து சேர்ந்த பல்வேறு இனத்தவரின், மொழியினரின் சங்கமமாக, கலவையாக இந்தியப் பண்பாடு உருப்பெற்றது.
இந்தோ-ஆரிய மொழிகள்
தற்கால இந்தோ-ஆரிய மொழிகளைக் கீழ்க்காணும் ஆறு பிரிவுகளில் அடக்க முடியும்.
1.     வடமேற்கு மொழிகள்: மேற்கு பஞ்சாபி, சிந்தி ஆகிய மொழிகள் இப்பிரிவில் அடங்கும்.
2.     தெற்குப்பகுதி மொழிகள்: மராத்தி, கொங்கணி ஆகியன இப்பிரிவிலுள்ள குறிப்பிடத்தக்க மொழிகள்.
3.     கிழக்குப்பகுதி மொழிகள்: ஒரியா, வங்காளி, அசாமி, மைதிலி, மகஹி, போஜ்புரி ஆகியன இப்பிரிவில் அடங்கும்.
4.     கிழக்கு-நடுப்பகுதி மொழிகள்: கோசாலி, அவதி போன்றன இப்பிரிவினைச் சார்ந்தன.
5.     நடுப்பகுதி மொழிகள்: இந்தி, கரிபோலி, உருது, பங்கரு, கிழக்குப் பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி,செளராஷ்ட்ரி போன்றன இப்பிரிவின் குறிப்பிடத்தக்க மொழிகள்.
6.     வடக்கு அல்லது இமயமலை மொழிகள்: கொர்காலி, நேபாளி, கர்வாலி போன்றவை இப்பிரிவினைச் சார்ந்தவை.
பழைய இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தில் ஏராளமான பேச்சுவழக்கு மொழிகள் இருந்தன. அவற்றுள் மகதி, அர்த்த மகதி, சூரசேனி போன்றவை உலகப்புகழ் பெற்றவை. இலக்கிய வழக்குப் பெற்றவையான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் புகழ் பெற்றவை. இவற்றுள் சமஸ்கிருதம், இந்திய நாட்டுப் பொதுமொழியாகச் செயற்பட்டுள்ளது. தமிழுக்கு நிகரான பழைமை, இலக்கியம், பாரம்பரியம் ஆகியவற்றை இம்மொழி பெற்றுத் திகழ்கின்றது. இந்திவியல் என்றால் சமஸ்கிருதவியல் என்று தொடக்க நிலையில் பிற நாட்டினர் கருதும் அளவுக்கு இந்தியப் பண்பாட்டின் – இலக்கியப் பாரம்பரியத்தின் – ஆற்றல்மிக்க வடிகாலாக இம்மொழி செயல்பட்டு வந்தது. பிராகிருதமும் பாலியும் மிகச் செல்வாக்குப்பெற்ற பழைய இந்திய மொழிகளாக அமைகின்றன. பௌத்த சிந்தனைகள், தத்துவக்கள் ஆகியவற்றை சுமந்து நிற்கும் ஆற்றல்மிக்க மொழியாகப் பாலி மொழி ஏற்றம் பெற்றது. தற்போது புதிய இந்தோ ஆரிய மொழிகளாக உருவெடுத்துள்ள அனைத்து மொழிகளும் கி.பி. 1000-க்குப் பின்னரே முழுவடிவைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுள் பஞ்சாபி மொழி, குறிப்பாக மேற்குப் பஞ்சாபி வேத காலச் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது. இதிலிருந்து சிந்தி மொழி காலப்போக்கில் கிளித்தெழுந்துள்ளது. பஞ்சாபி குர்முகி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. இது காஷ்மீரி மொழி பயன்படுத்தும் சரதா எழுத்துக்களோடு தொடர்புடையது. முஸ்லீம்கள் இம்மொழியில் எழுதும்போது பாரசீக எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். இந்துக்கள் தேவநாகரியைப் பயன்படுத்துகின்றனர். ஒரே மொழி பல்வேறு வகை   எழுத்துக்களால், பல்வேறு சமயத்தினரால் எழுதப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பகுதிகளில் பேசப்படும் சிந்திமொழி ஆறு வட்டார வழக்குகளையும் ஏராளமான இலக்கியச் செல்வங்களையும் பெற்றுள்ளது. பிராகிருதத்திலிருந்தும், சமஸ்கிருதத்திலிருந்தும் சொற்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டியது. இதுவே இவ்விரு மொழிகளுக்கும் இடையேயுள்ள அடிப்படை வேறுபாடாக அமைந்துள்ளது.
இந்துத்தானியோடு மிகவும் தொடர்புடைய கோசாலி பிரிவில் பல குறிப்பிடத்தக்க கிளைமொழிகள் உள்ளன. இவற்றைக் கிழக்குப்பகுதி இந்திமொழி (Eastern Hindi) என்று கூறும் மரபும் உள்ளது. மகதமொழிப் பிரிவில் போஜ்புரி (Bhojpuri) சிறப்பு வாய்ந்த மொழியாக உள்ளது. இப்பிரிவிலுள்ள மைதிலி மொழி பீகாரின் வடபகுதியிலும், மகஹிமொழி (Magahi) பீகாரின் தென்பகுதியிலும் வழங்குகின்றன. கிழக்கு மகதம் (Eastern Magadham) என்ற பிரிவில் வங்காளி, அசாமி, ஒரியா ஆகிய மொழிகள் உள்ளன. வங்கமொழி 7 கோடி மக்களால் பேசப்படுகின்றது. இம்மொழி பேசுவோரில் பெரும்பாலோர் கிழக்குப் பாகிஸ்தானில் உள்ளனர். இலக்கிய வளம் மிக்க இம்மொழியில்தான் தாகூர் அரிய பல இலக்கியப் படைப்புக்களை நல்கியுள்ளார். அசாமி, ஒரியா ஆகிய மொழிகள் நல்ல இலக்கியவளம் உடையன. ஒரியமொழி 17 ஆம் நூற்றாண்டில் முழு வளர்ச்சி பெற்றுள்ளது. வங்காளமொழிக்கு இணையாக வைத்து நோக்கும் பல நல்ல இலக்கியங்கள் இம்மொழியில் தோன்றின.
இராஜஸ்தானி மொழியும் இந்தோ ஆரிய மொழியிலிருந்து பிரிந்து ஒரு தனி மொழியாக மலர்ந்துள்ளது. பல வட்டார வழக்குகளின் இணைவாகவே இம்மொழி காட்சி தருகின்றது. மார்வாடி இலக்கியங்களையே இராஜஸ்தானி இலக்கியங்கள் என்று அழைக்கிறோம். இராஜஸ்தானியோடு மிகவும் தொடர்புடைய மொழியாகக் குஜராத்தி காணப்படுகின்றது. இவ்விரு மொழிகளோடு தொடர்புடைய மற்றொரு மொழியாகச் செளராஷ்ட்ர மொழி காட்சி தருகின்றது. தமிழகத்திலும், ஆந்திராவிலும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள செளராஷ்ட்ரர்கள் இதனைப் பேசுகின்றனர்.
வட இந்திய மொழிகளில் குறிப்பிடத்தகுந்த மொழியான மராத்தி மொழி 21/2 கோடி மக்களால் பேசப்படுகின்றது. 12-ஆம் நூற்றாண்டு முதல் பல இலக்கிய வளங்களை இம்மொழி பெற்றுத் திகழ்கின்றது. கோவா, மகாராஷ்ட்ரக் கடற்கரைப் பகுதி ஆகியவற்றில் கொங்கணிமொழி பேசப்படுகின்றது. இது மராத்தியோடு மிக நெருங்கிய தொடர்புடையது. ஹல்பி என்ற மொழி மத்தியப் பிரதேசத்தின் பஸ்தர் (Bastar) மாவட்டத்தில் பேசப்படுகின்றது. இதன் இலக்கண வடிவம் மராத்தியோடு ஒற்றுமையுடையது போன்று காணப்பட்டாலும் ஒரிய, போஜ்புரி போன்ற மொழிகளுடன் இது கொண்டுள்ள உறவு அதிகமானது.
இமயமலை மொழிகள்
இமயமலை மொழிகள் காஷ்மீரத்தின் கிழக்குப்பகுதி முதல் பூட்டான் (Bhutan) வரையுள்ள நிலப்பரப்பில் பேசப்படுகின்றன. பஹரி அல்லது இமாலி என்று அழைக்கப்படும் இம்மொழிகள் பல கிளைமொழிகளையும் வட்டார வழக்குகளையும் பெற்றுத் திகழ்கின்றன. இப்பகுதியில் வாழும் மக்களிடையே நேபாள மொழி செல்வாக்குப் பெற்றுள்ளது. இந்தியாவில் வாழும் நேபாள மக்கள் இம்மொழிக்கும் இந்திய நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்றாக அறிந்தேற்பு தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர்,
ஆஸ்ட்ரிக் ஆசிய மொழிகள் (Austric-Asiatic Languages)
இந்திய நாட்டின் தொன்மையான மொழிக்குடும்பமான ஆஸ்டிரிக்-ஆசிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பல பிரிவுகளாகப் பாகுபடுத்தப் பட்டுள்ளன. முண்டா அல்லது கோல் மொழிகள் கிழக்கு இந்தியப் பகுதிகளிலும் நடு இந்தியப் பகுதிகளிலும் வழக்கிலுள்ளன. தேயிலைத் தோட்டங்களில் பணி புரியும் முண்டாரி அல்லது சந்தாலி மொழிகளைப் பேசுவோரால் இவை வடக்கு வங்காளம், அசாம் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். இம்மொழிகள் சோட்டா நாக்பூர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் போன்ற பகுதிகளில் பேசப்படுகின்றன. ஹோ, பிர்ஹோர். பூமிஜ், கோர்வா போன்ற மொழிகள் இப்பிரிவில் குறிப்பிடத்தக்கன. சவரா, கடபா போன்ற மொழிகளும் முண்டாப் பிரிவோடு தொடர்புடையன.
காசி (Khasi) மலையில் வாழ்வோரால் இக்குடும்பத்தின் வேறு சில மொழிகள் பேசப்படுகின்றன. சந்தாலி மொழி 30 இலட்சம் மக்களால் பேசப்படுகின்றது. முண்டாரியிலும், ஹோ (HO) என்ற மொழியிலும் ஏராளமான வாய்மொழி இலக்கியங்கள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டில் ஏராளமான பிறநாட்டுக் கிறித்தவச் சமயத் தொண்டர்கள் இம்மொழிகளின் வாய்மொழி வழக்காறுகளைப் பயன்படுத்திப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளனர். சந்தாலி மொழியிலுள்ள இலக்கியங்கள் பெரும்பாலும் ரோமன் எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளன. ஆஸ்டிரிக்-ஆசிய மொழிகளுள் ஒன்றான காசி (Khasi) மொழி மூன்று இலட்சம் மக்களால் பேசப்படுகின்றது. ரோமன் எழுத்துகளில் இம்மொழியின் இலக்கியங்கள் பல கிறித்தவ அருட்தொண்டர்களால் அச்சிடப்பட்டுள்ளன. --
சீன-திபெத்திய மொழிகள்
இம்மொழிகளைத் தாய்-சீனம், திபெத்தோ-பர்மன் என்று இருபெரும் பிரிlவாகப் பகுப்பர். சியாமிஸ் அல்லது தாய் (Thai) மொழியினை சிலர் இப்பிரிவில் அடக்கிக் காண்பர். வேறு சிலர் இதை மறுக்கின்றனர். அஹோம் (Atom) கம்தி (Khamti) ஆகிய மொழிகள் முதல் பிரிவில் முறிப்பிடத்தக்கன. இரண்டாவது பிரிவில் பழைய திபெத்து, பழைய பர்மிய மொழி ஆகியன அடங்கும். இப்பிரிவு மொழிகளுள் பல கிளை பல கிளைமொழிகளும் உள்ளன.
இக்குடும்பத்தில் குறிப்பிடத்தக்க மொழிகளாக மணிப்பூரி, நிவாரி (Niwari) ஆகியன அமையும். மணிப்பூரி தற்போது வங்காள மொழி எழுத்துகளால் எழுதப்படுகின்றது. நிவாரி மொழி நேப்பாளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இந்தியர்களால் பேசப்படுகின்றது. லெப்சா (Lepcha) என்ற மற்றொரு மொழியும் இப்பிரிவில் உள்ளது.
பிறமொழிகள்
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இரு பிரிவுகளைச் சார்ந்த மொழிகள் உள்ளன. அந்தமான் மொழி பிற நீக்ரோ இனத்தவரின் மொழிகளோடு உறவுடையது. அந்தமான் மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரமாக இருக்கலாம் எனறு கணிக்கப்பட்டுள்ளது. நிகோபார் மொழி ஏறத்தாழ 10,000 பேரால் பேசப்படுகின்றது. இதை ஆஸ்ட்ரிக்-ஆசிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி என்றும் சிலர் கருதுகின்றனர்.
சீன மொழியைப் பேசுவோரும், சோமாலி மொழி பேசுவோரும் அரபிய மொழி, இரானிய மொழி பேசுவோரும் இந்திய நாட்டில உள்ளனர். ஏறத்தாழ 1.5 இலட்சம் பேர் ஆங்கிலத்தை வீட்டு மொழியாகப் பேசுகின்றனர். கோவாவில் போர்த்துக்கீஸ் மொழியும் புதுச்சேரியில் பிரஞ்சுமொழியும் பேசுவோர் கணிசமாக உள்ளனா. அரபிமொழியும், பாரசீக மொழியும் இந்தியாவில் பேசப்படும் பிறமொழிகளுள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் பாரசீக மொழி இந்திய மொழியாகவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
17-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில மொழி இந்தியாவில் பேராதிக்கம் செலுத்தத் தொடங்கியது. வங்காளம் தான் ஆங்கிலத்தின் வளர்ப்புப் பண்ணையாகத் திகழ்ந்தது. இம்மொழியும் இதன் இலக்கியங்களும் இந்திய நாட்டு இலத்தியங்கள் மீதும் மொழிகள் மீதும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. இந்திய மக்களையும் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் நவீனப்படுத்துவதிலும் தேசிய ஒருமைப்பாட்டைத் தோற்றுவிப்பதிலும், மக்களாட்சிக் கோட்பாடுகளைக் பரப்பி வருவதிலும் இம்மொழியின் பங்களிப்பு கணிசமானது.

3 comments:

  1. அருமையான பதிவு!! நன்றி!!

    ReplyDelete
  2. "குமரிலப்பட்டர்"என்ற இந்து தத்துவ அறிஞர் அசாமில் பிறந்தவர் என்பது தான் உண்மை மற்றபடி அருமையானது

    ReplyDelete
  3. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் குமரிலப்பட்டர்

    ReplyDelete